"நீட்" வேண்டாம்... ஓரணியில் தமிழகம்..!

0 4082

நீட் தேர்வு விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த, முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 19-ம் தேதி, 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, அனைத்து கட்சிகளின் சார்பில் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம், 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தபடி, அவரது தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு ரத்துக்கான சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமலேயே ஆளுநர் வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும், ஒரு சட்டத்தை இயற்றக்கூடிய அதிகாரம் உள்ள சட்டமன்றத்தில், சட்டம் இயற்றி அனுப்பும்போது அதனை ஆளுநர்கள் மதித்து ஒப்புதல் அளிப்பது தான் மக்களாட்சியின் தத்துவம் என்றும் கூறினார். 

இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வை கொண்டு வந்து மாநில சுயாட்சியை மத்திய அரசு பறித்துவிட்டதாக தெரிவித்தார். 

முன்னதாக இக்கூட்டத்தில் இருந்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். நீட் தேர்வு விவகாரத்தில், உணர்ச்சிகரமான அரசியல் செய்ய வேண்டாம் என்று அனைத்துக் கட்சியினரையும், அவர் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments